கைப்பொண்ணுவைக் கடத்திய கட்டைக் குரலோன்

இருட்டடிப்பு செய்யப்பட்ட கடத்தல்..!!!

இட்லி வடையும் உடந்தையா.. பரபரப்பான செய்தி...

வெள்ளி, ஏப்ரல் 28, மதுரை:

வ.வா.சங்கத்தின் மகளிர் அணித் தலைவியும் சங்கத்தின் தலைவரான கைப்புள்ளையின் வருங்கால மனைவியுமான கைப்பொண்ணு கடைசியாக ஏப்ரல் பத்தொன்பதாம் தேதி வ.வா.சங்கத்தின் எதிர்கட்சியான ப.ம.கவின் பாசறைக்குச் சென்றதும், அண்ணன் கைப்புவுக்காக குரல் கொடுக்க முயன்று தோற்றதும் அறிந்ததே...

அதற்குப்பின் அண்ணி கைப்பொண்ணைக் காணவில்லை என்று கட்சியின் அங்கத்தினர்களான, பொன்ஸ், ஜொள்ளு பாண்டி, இளா ஆகியோர் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தனர். தளபதி சிபியின் அறிவுரையின் பேரில் கட்சியின் மூளையான பாண்டியும் அவ்வப்போது காணாமல் போய், தன்னையே கண்டுபிடித்துக் கொண்டு வரும் கட்சியின் மூத்த உறுப்பினரான கீதாவும் சேர்ந்து அண்ணி கைப்பொண்ணைத் தேட ரகசியமாக முயன்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த இருபத்தி ஏழாம் தேதி, அடையாளம் தெரியாத நபரிடமிருந்து பேராசிரியர் கார்த்திக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அண்ணி கைப்பொண்ணுவைக் கடத்திச் சென்றது தான் தான் எனவும், அண்ணியின் தொல்லை தாங்க முடியவில்லை எனவும், ஒருநாளைப்போல அண்ணியின் சாப்பாட்டுச் செலவுக்கு மட்டும் ஐயாயிரம் ரூபாய் ஆகிறது எனவும், பத்தாயிரம் இந்திய ரூபாய்கள் தருவதாகவும், அண்ணியை வந்து அழைத்துப் போகுமாறும் கட்டைக் குரலில் சொல்லப்பட்டது.

பேராசிரியர் கார்த்திக், ஏஞ்சலீனா அம்பாளைப் பற்றி பாட்டு எழுத வேண்டியிருப்பதால், அண்ணியை மதுரையில் சென்று விட்டு விடுமாறும், மங்கையர் திலகம் கீதா வரும் இருபத்தி எட்டாம் தேதி மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் வந்து அழைத்துச் செல்வார் எனவும் கூறி விட்டார். "இன்னும் இருபத்து நாலு மணி நேரம் காக்க வேண்டுமா" என்று பெருமூச்சு விட்ட அந்தக் கட்டைக் குரலோன் வேறு வழியின்றி இன்று மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் கைப்பொண்ணைக் கொண்டு விட்டதாகச் சொல்லப்படுகிறது.

அது போலவே, அவரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்திலிருந்து அழைத்துப் போக கீதாவும், தளபதி சிபியும் நேற்று வந்திருந்தனர். அப்போது கைப்பொண்ணுவிடம் பேசிய போது:

நிருபர்: உங்களை பத்தொன்பதாம் தேதியிலிருந்து காணவில்லையே, எங்கு சென்றீர்கள்?

கைப்பொண்ணு: நான் ப.ம.கவுக்கு அறிக்க விட்டுபுட்டு, அப்டிக்கா மருத மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டு பக்கமா போய்கிட்டு இருந்தேன். அப்போ யாரோ ரெண்டு பேரு என்னைப் பின்னாடியே வந்துருக்கானுவ.. நான் பாக்கலைய்யா.. எங்க ராசா நெனப்புல பாட்டு பாடிகிட்டே திரிஞ்சிகிட்டு இருந்தேன்.. அப்படியே ஒரு சாக்குப்பையப் போட்டு அமுக்கினாங்கையா.. அதுக்கு பொறவு என்ன நடந்துச்சுன்னு எனக்கு தெரியாது.. ஆனா மவராசனுங்க.. நல்லா சாப்பாடு போட்டானுவ.. இன்னும் ரெண்டு நாள் அங்ஙனவே இருந்திருக்கலாம்.. கொணாந்து விட்டுட்டானுவ!!! ம்ஹ்ம்...

நிருபர்: உங்களை கடத்திகொண்டு சென்ற அந்த ஆளுங்க அடையாளம் ஏதும் தெரியுமா?

கைப்பொண்ணு: நான் என்னாத்த கண்டேன்.. கர கரன்னு கட்டக் கொரல்ல பேசினான்..

சிபி: கட்டத் துரையா இருக்குமோ?

கீதா: இல்லை இல்லை.. அந்த மருத்தவர் பதிவுக்கு பதில் சொல்லப் போய் தான் இப்படி ஆகி இருக்கு.. அவராத்தான் இருக்கும்

சிபி: பார்த்திபனக் கூட கொஞ்ச நாளா காணோம்.. அவரு பச்சக் குதிரை ரிசல்ட் அது இதுன்னு மதுரை வந்ததா கேள்வி..

நிருபர்: உங்க கட்சியில் மற்றவர்களை எல்லாம் விட்டு விட்டு கைப்பொண்ணுவைக் கடத்திப் போக என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

கீதா: எல்லாம் பொறாமை தான்.. சரியாக வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று இப்படி ஒரு கடத்தல் நிகழ்ந்திருக்கிறது என்றால், அது எதற்கு என்று மக்களுக்கு நன்றாகவே புரியும். எங்கள் பலம் மிகுந்த ஆண்டிப்பட்டித் தொகுதியில் நாங்கள் வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காகவே செய்யப்பட்ட சதி இது.

சிபி: இன்னும் எங்கள் கட்சியைச் சேர்ந்த பலரையும் இப்படிக் கடத்திச் செல்ல ப்ளான் போட்டிருகிறார்கள் அந்தப் பச்சோந்திகள். என்னைக் கூட அடித்து உதைத்து அவர்கள் பின்னூட்டப் பெட்டியில் கையெழுத்து வாங்கியது தெரிந்த செய்தி தானே.. தேர்தல் நெருங்க நெருங்க அந்தப் பச்சோந்திக் கட்சி பயத்தில் என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் இதையெல்லாம் நன்கு அறிவார்கள்.

இவ்வாறு தளபதி சிபி கூறினார்.

கைப்பொண்ணைக் கடத்திய கட்டைக் குரலோன் யாரென்று விசாரிக்கவோ வழக்குப் பதிவு செய்யவோ ஆளும்கட்சியின் போலீசார் மறுத்து விட்டார்கள்.

சங்கத்தின் ஆஸ்தான பத்திரிக்கையான இட்லி வடையின் செய்தியாளர், கைப்பொண்ணு திரும்பி வந்த நிகழ்வைக் கவர் செய்ய வரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. எனவே நமது பத்திரிக்கையான பொங்கல் வடையில் மட்டுமே இந்தச் செய்தி இடம்பெறுகிறது என்பது தனிச்சிறப்பாகும்.

1மறுமொழிகள்:

Mon May 01, 03:09:00 AMமணிக்கு, எழுதியவர்: Blogger Geetha Sambasivam

என்ன கைப்பொண்ணூ, கடைசிலே நம்ம மடியிலேயே கை வக்கப் பார்க்கறீங்களா? நான் ஒண்ணும் அப்போ அப்போ காணாமல் போவது இல்லங்க , சங்க வேலைல பிசி அது மட்டும் இல்லாமல் சங்கத்தின் நிரந்தரத் தலைவியும் நான் தானுங்க. ஏதோ கொஞ்ச நாள் ஊருக்குப் போயிட்டேன், உடனே நான் வர மாட்டேன் என்று மூத்த உறுப்பினர் ஆக்கிட்டீங்க. நம்ம பதிவுப் பக்கம் வந்து பாருங்க. நான் அறிக்கை விட்டு விட்டுத்தான் போயிருக்கேன்.முதலில் நாற்காலியை விட்டு இறங்குங்க.(ஒரு செலவில்லாத விளம்பரம் தாங்க)இந்த சங்கத் தலைவி பதவி மட்டும் விட்டுக் கொடுத்துடுங்க.

 

Post a Comment

<< முகப்பு